• Please use an working Email account to verify your memebership in the forum

Super deluxe

Sambaavam

Well-known member
Messages
438
Points
93

Reputation:

நான்கு கதைகள், நான்கு களங்கள், பல வித்தியாசங்கள் இருந்தாலும் எல்லாவற்றினூடாகப் பாலியல் சிக்கல் ஒரு மையச்சரடு. சுருக்கமாக ‘சூப்பர் டீலக்ஸ்’ பற்றி இப்படிச் சொல்லலாம்.

வீட்டில் சொன்னபடி திருமணம் செய்துகொண்ட முகில் - வேம்பு வாழ்க்கையில் ஒரு வித்தியாச விருந்தாளியின் வருகை நிகழ்கிறது. இன்னொருபக்கம், பல ஆண்டுகளுக்கு முன் ஓடிப்போன கணவனின் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் ஜோதியும் மகன் ராசுக்குட்டியும்! பதின்பருவத்தை நெருங்கும் ஐந்து விடலைகள் தங்கள் வயதிற்கே உரிய சேட்டை ஒன்றை செய்யத் துணிகிறார்கள். தனக்கென ஒரு மதம், அதற்கென சில வழிமுறைகள் என பிரசாரமும் பிரார்த்தனையுமாய் அற்புதம் என்ற ‘கடவுளின் குழந்தை’. முதல் பார்வைக்குத் தொடர்புக் கண்ணியே தென்படாத இந்த நான்கு கதைகளையும் திறமையான திரைக்கதையால் கோத்து கடைசியில் ‘ஆஹா’ன்னு சொல்ல வைக்கிறார்கள் தியாகராஜன் குமாரராஜா அண்ட் கோ!

சூப்பர் டீலக்ஸ் - சினிமா விமர்சனம்
படத்தில் ஏராளமான கேரக்டர்கள் இருக்கிறார்கள். ஆனால் படம் முடியும்போது அவர்களின் பெயர் நம் மனதோடு ஒட்டிக்கொள்வதுதான் படம் ஏற்படுத்தும் தாக்கத்தின் சாட்சி. பகத் பாசில் நடிப்பிற்கு சூப்பராக தீனி போட்டிருக்கிறது திரைக்கதை. க்ளைமாக்ஸுக்கு சற்றுமுன், ‘சார்... சார்’ என நொடிக்கு நொடி ரியாக்‌ஷன்கள் மாற்றும் காட்சி செம்ம! சமந்தா - இதுவரை பார்த்திடாத ராவான ரோலில்... குற்றவுணர்ச்சியில் மருகி, உடைந்து அழுது என வெயிட் கூட்டுகிறார்.

ஷில்பா - பட அறிவிப்பு தொடங்கி ரிலீஸ்வரை எல்லாரும் எதிர்பார்த்த கதாபாத்திரம். காரிலிருந்து இறங்கும் காட்சியில் தியேட்டரில் உறையும் மௌனம், கண்ணாடி முன் அவர் நிற்கும் காட்சியில் உடைந்து முணுமுணுக்க வைக்கிறது. ‘மாஸ் ஹீரோ’ இமேஜை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு இயக்குநரின் நாயகியாக, தியாகராஜன் குமாரராஜாவின் ஷில்பாவாக மாறியிருக்கிறார் விஜய் சேதுபதி. இதுவரை பல படங்களில் விஜய்சேதுபதி பல வித்தியாசமான வேடங்களை ஏற்றிருந்தாலும், சில படங்களில் பாத்திரங்களைத் தாண்டி ‘சேதுபதி’ தெரிவார். ஆனால் இங்கே சேதுபதியை மறந்து ஷில்பாவே நம் கண்களையும் இதயத்தையும் நிறைக்கிறார். காவல்நிலையத்தில் ஷில்பாவுக்கு நேரும் அந்தக் கொடுமை, இதுவரை தமிழ் சினிமா வரலாற்றில் எந்த நாயகனும் நடிக்கத் துணியாத காட்சி. விஜய்சேதுபதிக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும்.

மிஷ்கினும் பொடியன் அஸ்வந்தும் சூப்பர் டீலக்ஸை திறமையாக முன்னெடுத்துப்போகும் தேர்ச்சக்கரங்கள். தன் பிரத்யேக உடல்மொழியால் ஒவ்வொரு காட்சியிலும் அசரவைக்கிறார் மிஷ்கின். வெள்ளந்தி ராசுக்குட்டியான அஸ்வந்த்தைப் பார்க்கும்போதெல்லம் ஷில்பாவைப் போல நமக்கும் அள்ளியெடுத்துக் கொஞ்சத் தோன்றுகிறது. மிஷ்கின் கூடவே வரும் ரமணாவின் நடிப்பு ‘அற்புதம்’. நாங்கள் சாட்சி!

நீளமான திரைக்கதையை போரடிக்காமல் இழுத்துச் செல்வது விஜய் ராம், அப்துல் ஜாஃபர், நவீன், ஜெயந்த், நோபல் ஜேம்ஸ் ஆகிய ஐந்து விடலைகளுக்குள் நடக்கும் உரையாடல்களும் சம்பவங்களும்தான். ரம்யா கிருஷ்ணன் இதுவரை தமிழ் சினிமா பார்த்தும் பார்த்திடாத ஆச்சர்ய அம்மா! காயத்ரி சங்கருக்கு காட்சிகள் குறைவென்றாலும் கிடைத்த இடத்தில் ஸ்கோர் செய்கிறார். முதன்முறையாக வில்லத்தனத்தில் டிஸ்டிங்ஷன் வாங்குகிறார் பக்ஸ்!

இயக்குநருக்கு இணையான இன்னொரு ஹீரோ யுவன். ஆங்காங்கே இளையராஜாவின் இசைக்கோப்பு, ஆங்காங்கே தன் டச் என படம் முழுக்க ரகளை செய்திருக்கிறார். தபஸ் நாயக்கின் சவுண்ட் மிக்ஸிங் உலகத்தரம். டார்க் காமெடி படங்களுக்கேற்ற கான்ட்ராஸ்ட் கலர்கள், அடர்த்தியான ஃப்ரேம்கள் என கூட்டாக இணைந்து சதமடித்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர்கள் நீரவ் ஷாவும் பி.எஸ் வினோத்தும்! வெவ்வேறு கதைகள், எக்கச்சக்க கதாபாத்திரங்கள் என்றிக்கும் படத்தை நேர்த்தியாகத் தொகுத்திருக்கும் சத்யராஜ் நடராஜன் பாராட்டுக்குரியவர்!

காஜியின் டி ஷர்ட் படம், இன்னொரு டிஷர்ட்டின் வாசகம் என எழில்மதியின் காஸ்ட்யூம் டிசைனிங்கும் கதை சொல்கிறது. இருப்பதை அப்படியே காட்டுவது சுலபம். ஆனால் தியாகராஜன் குமாரராஜா காட்டுவது அவரின் கற்பனை ஃபேன்டசி உலகம். அதில் நாமும் ஒருவராய் பயணப்படுவதில் இருக்கிறது கலை இயக்குநர் விஜய் ஆதிநாதனின் வெற்றி. ஆரண்ய காண்டம் தொடர்ச்சி முதல் பாலிதீன் கவர் வரை குறியீடுகள் குவிந்துகிடக்கின்றன.

மிஷ்கின், நலன் குமாரசாமி, நீலன் சேகர், தியாகராஜன் குமாரராஜா என நால்வரின் கைவண்ணத்தில் உருவாகியிருக்கிறது திரைக்கதை. ‘‘அது வெறும் கல்லுதான சார்?’’, ‘‘அந்த மாதிரிப் படம் பார்க்க ஆள்கள் இருக்கும்போதும் நடிக்க ஆள் இருக்க மாட்டாங்களா?’’ என வசனங்கள் மூலமும் காட்சி யமைப்புகள் மூலமும் ஏராளமான கற்பிதங்களை அடித்து நொறுக்குகிறது இவர்களின் எழுத்து! ஆனால் பகத் பேசும் சாதிக்கு ஆதரவான வசனம், பார்வையாளர்கள் மனதில் ஊற்றப்படும் நஞ்சுத்துளி!

சூப்பர் டீலக்ஸ் - சினிமா விமர்சனம்
படத்தில் வரும் பெண் கதாபாத்திரங்கள் தமிழ் சினிமாவிற்குப் புதிது. அவர்கள் தங்களுக்குப் பிடித்ததை செய்கிறார்கள். அதைத் தயக்கமின்றி வெளிப்படுத்துகிறார்கள். அதற்கான விளைவு களையும் திறந்த மனதோடு ஏற்றுக்கொள்கிறார்கள்.

தேவைக்கு அதிகமாக நீளும் சில காட்சிகள் கவனத்தை சிதறடிக்கின்றன. ஆரண்ய காண்டம் பட கதாபாத்திரங்களின் சாயல் இதிலுள்ள கதாபாத்திரங்களிலும் தென்படுவது சுவாரஸ்யத்தைக் குறைக்கிறது. ‘இது என்னுடைய ஃபேன்டசி உலகம்’ என இயக்குநர் சொன்னாலும் கொஞ்சமே கொஞ்சம் லாஜிக்காவது இருந்திருக்கலாமே என நினைப்பு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஒவ்வொரு கதைக்குமான டைம்லைன் சிலரைத் தலைசுற்ற வைக்கலாம்.

ஆபாச சி.டி விற்கும் பெண் தொடங்கிப் பலரின் உடல்மொழியில் செயற்கைத்தனம். தொழில்நுட்பம் வளர்ந்த காலத்தில் இன்னுமா விடலைகள் சி.டி.யிலும் திரையரங்கு சென்றும் பலான படம் பார்க்கிறார்கள் என்பதுபோல பல காட்சிகளில் காலக்குழப்பம். திடீரென்று ஏலியன் ஃபேன்டசி காட்சி, ஷில்பா வாழ்க்கையின் உருக்கமான காட்சி என்று திரைக்கதை வெவ்வேறு மனநிலைகளை மாறிமாறிப் பார்வை யாளர்களுக்கு வழங்குகிறது. உலக சினிமா என்றால் உலக சினிமாக்களைப் போலவே குறியீடுகள் தளும்பத் தளும்ப எடுப்பதா, நம் மண்ணின் வாழ்க்கையை எதார்த்தமாகச் சித்திரித்தால் அது உலக சினிமா ஆகாதா என்ற கேள்விகள் எழுகின்றன.

என்றபோதும் ஒரு புதியவகை அனுபவத்தைத் தந்தவகையில் ‘சூப்பர் டீலக்ஸ்’ புதியவகை சினிமாதான்.

 

Attachments

  • 0 bytes · Views: 0
Top