• Please use an working Email account to verify your memebership in the forum

ம. சிங்காரவேலர் : மே 1 தொழிலாளர் நாள் ஆசியாவில் முதல் முதலில் சென்னையில் தான் இவரால் கொண்டாடப்பட்டது.

T

The Reader

Guest


ம. சிங்காரவேலர் (பெப்ரவரி 18, 1860 -பெப்ரவரி 11, 1946) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பொதுவுடமைவாதியும் தொழிற்சங்கவாதியும் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். மயிலாப்பூர் சிங்காரவேலு என்ற முழுப்பெயர் கொண்ட இவர் பொதுவுடைமைச் சிந்தனைகளை தமிழ்நாட்டில் பரப்ப ஆற்றிய பணிகளுக்காக "சிந்தனைச் சிற்பி" எனப் போற்றப்படுகிறார்.


இவரை பற்றி தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா எழுதிய நூலில் மா. சிங்காரவேலர் செட்டியார் பரதவர் குலம், நெய்தல் நாயகன். என்றும் இவர் ஒரு சர்மா(பிராமணர்) ஆக பிறந்து இருந்தால் இவர் சிலை ரஸ்யாவின் மாஸ்கோ வரை நிறுவ பட்டு இருக்கும் என்று கூறி உள்ளார். மேலும் காந்தி புராணம், கந்த புராணம் பேசும் நபர்களை கொண்டாடும் மக்கள் இவரை மிக சாதரணமாக நினைத்து விட்டனர் என்றும், ஆங்கிலேய இந்தியா இந்தியாவில் நடந்த மிகப்பெரிய போராட்டம் 10 என்றால் நான்கில் இவரின் பங்கு மிக அதிகம்.
வாக்கு வங்கி இல்லாத ஒரு சமூகத்தில் பிறந்தால் இவர் பெரிதாக போற்றப்படுவது இல்லை.

பிறப்பு, கல்வி

சிங்காரவேலர் 1860-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி பிறந்தார். அவரது குடும்பம் பிற்படுத்தப்பட்ட மீனவர் சமூகத்தைச் சேர்ந்தது. தனது பள்ளிக்கல்வியை முடித்த பின் மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். அதன்பின் சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று வழக்குறைஞர் ஆனார். ஆங்கிலம், தமிழ் மொழிகளைத் தவிர, இந்தி, உருது, பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் அவருக்குப் பட்டறிவு இருந்தது. வெலிங்டன் சீமாட்டி கல்வி வளாகத்தில்தான் அவர் வீடு இருந்தது . அங்கு 20,000 நூல்களுக்கும் மேல் அவர் சேகரித்து வைத்திருந்தார் . வசதியான குடும்பத்திலிருந்து வந்து அவர் வழக்கறிஞர் தொழில் செய்தபோதும் வறியவர்கள்பற்றியே அவரது மனம் சிந்தித்துக்கொண்டிருந்தது என்பதும் பலருக்கும் தெரியாது.அவர் இருந்த குடியிருப்பு வளாகத்தை அவரது கைதுக்குப் பிறகு அன்றைய ஆளுநர் வெலிங்டன் பிரபு கைப்பற்றி, அந்த இடத்தில் கல்வி நிலையத்தை நிறுவி, தனது மனைவியின் பெயரை வைத்துக்கொண்டார்.

தொழில்

சிங்காரவேலர் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சபையில் வழக்கறிஞராக 1907-ம் ஆண்டு தன்னைப் பதிவுசெய்துகொண்டார். வழக்கறிஞர் தொழிலில் இறங்கிய சிங்காரவேலரோ அடக்குமுறையாளர்கள், பேராசைக்காரர்கள் ஆகியோரின் சார்பாக எந்தவொரு சூழ்நிலையிலும் வழக்காடியதில்லை என்பது குறிப்பிடத் தக்கது. 1921-ம் ஆண்டில் ஒத்துழையாமை இயக்கத்தினால் தனது வழக்கறிஞர் தொழிலைப் புறக்கணித்தார்.

பெரியாருடன் தொடர்பு

1931ஆம் ஆண்டு பெரியார் ஓராண்டு உலகப் பயணம் மேற்கொண்ட பொழுது, தான் வரும்வரை தனது குடியரசு ஏட்டிற்கு சிங்காரவேலர் கட்டுரைகள் எழுதி வழிகாட்ட வேண்டுமென கேட்டுக் கொண்டார். அதையேற்று சிங்காரவேலர் :

 • கடவுளும் பிரபஞ்சமும்
 • கடவுள் என்ற பதமும், அதன் பயனும்
 • மனிதனும் பிரபஞ்சமும்
 • பிரபஞ்சப் பிரச்சனைகள்
 • மெய்ஞான முறையில் மூட நம்பிக்கைகள்
 • மூட நம்பிக்கைகளின் கொடுமை
 • பகுத்தறிவு என்றால் என்ன?
போன்ற கட்டுரைகள் எழுதி உதவினார்.

இந்திய பொதுவுடைமைக் கட்சி

1922-ல் பம்பாயைச் சேர்ந்த எஸ்.ஏ. டாங்கேயுடன் தொடர்பு ஏற்பட்டது. 1922-ல் எம். என். ராய் வெளிப்படுத்திய திட்டத்தால் கவரப்பட்டு, அவருடன் தொடர்ந்து கடிதப் போக்குவரத்து வைத்துக்கொண்டிருந்தார். 1923-ல் அவர் மே தினம் கொண்டாட இந்துஸ்தான் உழவர் உழைப்பாளர் கட்சி (லேபர் கிசான் பார்ட்டி ஆஃப் இந்துஸ்தான், எல்.கே.பி.எச்.) என்கிற கட்சியைப் புரட்சிகரத் திட்டத்துடன் ஆரம்பித்தார். ‘லேபர் கிசான் கெஜட்’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் வார இதழையும், ‘தொழிலாளன்’ என்ற தமிழ் வார இதழையும் ஆசிரியராக இருந்து பதிப்பித்து வெளியிட்டார். மார்ச் 1924-ல் கான்பூர் போல்ஷ்விக் சதி வழக்கில் சிங்காரவேலர் குற்றம்சாட்டப்பட்டார். அவர் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்ததால், அவருக்கு எதிரான நடவடிக்கை கைவிடப்பட்டது.இவ் வழக்கே இந்திய மண்ணில் பொதுவுடைமை இயக்கம் , மக்கள் இயக்கமாக மாற காரணமாக இருந்தது. கான்பூர் பத்திரிகையாளரான சத்திய பக்த் என்பவர் சட்டபூர்வமான ‘இந்திய பொதுவுடைமைக் கட்சி’ அமைக்கப்பட்டிருப்பதாக 1924, செப்டம்பர் மாதம் அறிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் முதல் மாநாடு 1925-ம் ஆண்டு, டிசம்பர் 28 முதல் 30 வரை கான்பூரில் சென்னைக் கம்யூனிஸ்ட் எம். சிங்காரவேரின் தலைமையில் நடந்தது.1927-ல் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட்டும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஷாபூர்ஜி சக்லத்வாலா சென்னைக்கு வருகைதந்தபோது சிங்காரவேலர் கேட்டுக்கொண்டதால், சென்னை மாநகராட்சி அவருக்கு வரவேற்பு விழா ஏற்பாடு செய்தது. சக்லத்வாலா பேசிய கூட்டங்களில் அவரது உரையை சிங்காரவேலர் மொழிபெயர்த்தார்.


 
Last edited by a moderator:
T

The Reader

Guest
சமூகப் பணிகள்
 • இந்தியாவில் முதன்முதலாக மே நாளைக் கொண்டாடியவர். (தொழிலாளர் நாள்)
 • உருசியாவின் கம்யூனிசப் புரட்சியால் கவரப்பட்டு, இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கத்தை 1918இல் தொடங்கினார். சென்னை பக்கிங்காம் கர்னாடிக் ஆலையில் தொடங்கப்பட்ட இச்சங்கத்தின் முதல் தலைவராகவும் பணியாற்றினார்.
 • தொழிலாளர் நலனுக்காக மே 1, 1923 ல் தொழிலாளர் விவசாயக் கட்சியைத் தொடங்கினார்.
 • 1925ல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைத் தொடங்கிய தலைவர்களுள் இவரும் ஒருவர்.
 • இவர் சென்னை மாநகராட்சி உறுப்பினராக இருந்த போது பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். அதன் பின்னர் இத்திட்டம் இடையிலேயே கைவிடப்பட்டது. எனவே இவரே காமராஜர் தமிழகம் முழுவதும் தொடங்கிய மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடி ஆவார்.
 • தமிழ் மொழிக்காகப் பெரிதும் பாடுபட்டார். தமிழை ஆட்சி மொழியாக்கும் கோரிக்கையை வலியுறுத்தினார்.
 • பல நூல்களை எழுதியுள்ளார். மேலும் பல நூல்களை வேறு மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.[5] இவர் எழுதிய சிந்தனை நூல்கள் மாஸ்கோ நகர் லெனின் நூலகத்தில் இடம் பெற்றுள்ளன. இவருடைய நூல்கள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.
 • பெரியார் ஈ. வே. ராமசாமியின் சுயமரியாதை இயக்கம் 1930களின் ஆரம்பத்தில் பொதுவுடைமைக் கொள்கையின் பக்கம் சாய சிங்காரவேலரின் தூண்டுதல் காரணமாக இருந்தது.
படைப்புகள் :

 1. உலகம் சுழன்று கொண்டே போகிறது
 2. கடவுளும் பிரபஞ்சமும்;1934; குடிஅரசு புத்தகாலயம், ஈரோடு.
 3. கல்மழை உண்டாகும் விதம்
 4. கோழிமுட்டை வந்ததும் காணாமல் போனதும்
 5. சமதர்ம உபன்யாசம்: தமிழ்மாகாண சமதர்ம மாநாட்டின் சமதர்ம உபன்யாசம்;1934; குடிஅரசு புத்தகாலயம், ஈரோடு.[9]
 6. சுயராஜ்யம் யாருக்கு? பாகம் 1
 7. சுயராஜ்யம் யாருக்கு? பாகம் 2
 8. சுயராஜ்யம் யாருக்கு? பாகம் 3: எது வேண்டும்? சுயராஜ்யமா? சமதர்ம ராஜ்யமா?; 1934; சமதர்ம பிரசுராலயம், 22 சவுத்பீச் ரோடு, திருவல்லிக்கேணி, சென்னை.
 9. தத்துவஞான விஞ்ஞானக் குறிப்புகள் -பல பகுதிகள்
 10. தத்துவ, விஞ்ஞான, பொருளாதாரக் குறிப்புகள்
 11. நடத்தை என்ற நவீன ஆராய்ச்சி
 12. பகுத்தறிவென்றால் என்ன?
 13. பிரகிருத ஞானம்
 14. பிரபஞ்சத் தற்காலப் பிரச்சினை
 15. பிரபஞ்சத்தில் தற்காலப் பிரச்சினை
 16. பிரபஞ்சப் பிரச்சினைகள்
 17. பிரபஞ்சமும் நாமும்
 18. பேய், பிசாசு
 19. மனித உற்பவம்; 1934; சமதர்ம பிரசுராலயம், 22 சவுத்பீச் ரோடு, திருவல்லிக்கேணி, சென்னை.
 20. மனிதனும் பிரபஞ்சமும்
 21. மனோ ஆலய உலகங்கள்
 22. மெய்ஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும் - பாகம் 1; 1934; பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம், ஈரோடு.
 23. மெய்ஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும் - பாகம் 2; 1934; பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம், ஈரோடு.
 24. விஞ்ஞான முறையும் மூட நம்பிக்கையும்
 25. விஞ்ஞானமும் மூடநம்பிக்கையும்
 26. விஞ்ஞானத்தின் அவசியம்
 27. ஜோதிட ஆபாசம்

இவரை பற்றி பாவேந்தர் பாரதி தாசன் பாடல் எழுதி உள்ளார்.

சிங்காரவேலனைப்போல் எங்கேனும் கண்டதுண்டோ?”

பொங்கிய சீர்திருத்தம் பொலிந்ததும் அவனால்

பொய்புரட் டறியாமை பொசிந்ததும் அவனால்

சங்கம் தொழிலாளர்க் கமைந்ததும் அவனால்

தமிழர்க்குப் புத்தெண்மை புகுந்ததும் அவனால்

மூலதனத்தின் பொருள் புரிந்ததும் அவனால்

புதுவுலகக்கனா முளைத்ததும் அவனால்

கோலப் பொதுவுடைமை கிளைத்ததும் அவனால்

கூடின அறிவியல், அரசியல் அவனால்!

தோழமை உணர்வு தோன்றிய தவனால்

தூய தன்மானம் தொடர்ந்ததும் அவனால்

ஏழ்மைஇலாக் கொள்கை எழுந்ததும் அவனால்

எல்லோர்க்கும் எல்லாம் என்றுணர்ந்ததும் அவனால்!

போர்க்குணம் மிகுந்தநல் செயல் முன்னோடி

பொதுவுடைமைக் கேகுக அவன் பின்னாடி!”

Source: Wiki Tamil


 
Top