• Please use an working Email account to verify your memebership in the forum

#மண்வளம் #மீட்டெடுக்க #சுழற்சி #முறை #விவசாயம்....

Santhosh

Elite member
Messages
395
Points
123

Reputation:

#மண்வளம் #மீட்டெடுக்க #சுழற்சி #முறை #விவசாயம்....

விவசாயத்தின் மீதான ஆர்வம் அதிகரித்து வந்தாலும், இங்கே பல நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றை அறிந்துகொண்டு அதில் ஈடுபட வேண்டியது அவசியம்.

விவசாயம் செய்பவர்களை வீட்டில் சும்மாதான் இருக்கிறார்கள் என்று சொன்ன காலம் இருந்தது. அந்த நிலைமை மாறி இன்று விவசாயம் என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்ற தொழிலாகியுள்ளது. விவசாயத்தின் மீதான ஆர்வம் அதிகரித்து வந்தாலும், இங்கே பல நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. பருவகால மாற்றம், நிலத்தடி நீர்மட்டம், ரசாயன உரங்கள், பயிர் தன்மை எனப் பல பிரச்னைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

விவசாயம் செய்வதற்கு மிகவும் அடிப்படையான ஒன்று மண் வளம். ஆனால், பல வருடங்களாக ரசாயனத்தில் மூழ்கிக் கிடக்கும் மண் எந்தவித ஆற்றலும் இல்லாமல் போயிருக்கிறது. பலர் இயற்கை முறை விவசாயத்திற்கு மாறினாலும் பலன்கள் உடனடியாக கிடைப்பதில்லை எனக் கூறுகின்றனர். இதற்கு மிக முக்கியமான காரணம் ஒரே வகையான பயிர்களை மீண்டும் மீண்டும் விளைவித்தல்தான்! ஒருமுறை ஒரு பயிரை விளைவித்து நல்ல மகசூல் அடைந்தால் மறுபடியும் அதே பயிரை விளைவிக்கின்றனர். இதுதான் மண்ணில் உள்ள சத்துக்கள் குறைவதற்கு மிக முக்கியக் காரணமாக இருக்கின்றது.

பயிர்கள் வளர்வதற்கு சிலவகை சத்துக்கள் அத்தியாவசியமானவை. அவை பெரு (macro) மற்றும் சிறு (micro) நுண்ணூட்டச் சத்துக்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. நைட்ரஜன், கார்பன், ஹைட்ரஜன், பொட்டாசியம் என்பவை சில பெரு நுண்ணூட்டச் சத்துக்களாகும். சிங்க், காப்பர், இரும்பு தாது போன்ற சில சிறு நுண்ணூட்டச் சத்துக்களாகும். இவ்வகை சத்துக்களை நீரிலிருந்தும், காற்றிலிருந்தும், உரங்களிலிருந்தும், மண்ணில் இருக்கும் பாக்டீரியாக்களிருந்தும் பயிர்கள் பெற்றுக்கொள்ளும். பெற்றுக்கொள்ளப்படும் சத்துக்களை நிலத்தில் தக்க வைக்க ஓர் எளிய வழிமுறை 'சுழற்சிமுறை விவசாயம்'.

சுழற்சி முறை விவசாயம் என்பது பயிர் அறுவடை முடிந்ததும் அதே பயிரை சாகுபடி செய்யாமல் வேறு வகை பயிர்களை சாகுபடி செய்வது ஆகும். சில வகை பயிர்களுக்கு குறிப்பிட்ட சத்துக்களின் தேவை அதிகம். உதாரணமாக, வேர்க்கடலை போன்ற தாவரங்களுக்கு நைட்ரஜன் தேவை அதிகம். முதல்முறை கடலைப் பயிரிடும் போதே மண்ணில் உள்ள நைட்ரஜனைப் பயன்படுத்தி விடும். மீண்டும் அதைப் பயிரிடும்போது மண்ணில் உள்ள நைட்ரஜன் குறைபாடு அதிகரித்து மகசூல் குறைந்து விடும். சுழற்சிமுறை விவசாயத்தில் இம்மாதிரியான பாதிப்புகள் இருக்காது.

ஒரு முறை நைட்ரஜன் வளம் குறைந்தால் அடுத்த முறை அதைச் சீர்செய்யும் வகையில் பயிரிட வேண்டும். அதற்கு வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜனை நிலத்தில் தக்க வைத்துக் கொள்ளும் பாக்டீரியாக்கள் அதிகம் வாழும் வேர்களைக் கொண்ட உளுந்து, பட்டாணி, பீன்ஸ் போன்ற லெக்கும் (legumes) வகைகளைப் பயிரிட வேண்டும். இதேபோல் கரும்பு அருவடைக்குப் பின் பொட்டாசியத்தினை மண்ணில் சமன் செய்ய கரும்புத் தோகைகளை எரித்து அச்சாம்பலுடன் உழுது விட வேண்டும். பின்பு பொட்டாசியம் பயன்படுத்தும் வேறேதும் பயிர்களை சாகுபடி செய்யலாம்.

ஆழத்தில் வேர்களைப் பரப்பும் கிழங்கு வகைகளை அகழ்ந்து எடுக்கப்பட்ட பின்பு அவ்விரிசல் வழியாக வளிமண்டலத்தில் உள்ள சத்துக்கள் நிலத்தில் கலக்கின்றன. ஒருசில மாதங்களுக்கு நிலத்தினைப் பயன்படுத்தாமல் புறம்போக்காக விட்டுவிடுதல் நல்லது. அச்சமயத்தில் வளரும் கலைச் செடிகளை அப்படியே வைத்து உழுதுவிட்டால் அவை மண்ணிற்கு உரமாக மாறிவிடும்.

இன்று இளையச் சமுதாயம் இயற்கை முறை விவசாயத்திற்கு மாறிவருகிறது. எந்தப் பயிர் அறுவடை முடிந்ததும் எதைப் பயிரிட வேண்டும் என்கிற விழிப்புணர்வு மிகவும் அவசியம். எளிய முறையில் மண்வளம் காக்க சுழற்சி முறை விவசாயம் ஒரு வரப்பிரசாதம்!!!!!
 
Top