• Please use an working Email account to verify your memebership in the forum

பழந்தமிழும் தமிழரும்

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

"தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
சூல்கலை வாணர்களும்-இவள்
என்று பிறந்தவள் என்றுண ராத
இயல்பி ளாம் எங்கள் தாய்"
- மகாகவி பாரதியார்.

தமிழ் நீண்ட நெடிய வரலாற்றை கொண்டது.. உலகில் பல மொழிகள் தோன்றி அழிந்துள்ளன.. நம் கண்முன்னே ஹுப்ரு மொழியின் அழிவை கொண்டோம்.. அதேபோல் சில மொழிகள் மக்களிடம் பழக்கத்தில் இல்லை.. சில தேவைக்காக மட்டுமே இலக்கியமாகவோ அல்லது எழுத்தாகவோ உள்ளன.. சமஸ்கிருதம் போன்றவை அத்தகையது.. ஆனால் நம் தமிழ்மொழி, சீனமொழி மட்டுமே இன்றுவரை பேச்சு, இலக்கியம், எழுத்து என்று அனைத்து பரிணாமங்களையும் கொண்டுள்ளது.. அத்தகைய சிறப்பு பெற்ற செம்மொழியாம் தமிழ்மொழி எப்போது தோன்றியது? என்ற கேள்விக்கு அகச்சான்றுகள் இருக்கும் அளவிற்கு கூட தொல்லியல் சான்றோ கல்வெட்டு சான்றோ கிடைக்கவில்லை.. ஏன் கிடைக்கவில்லை?

"கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு
முன் தொன்றிய மூத்தகுடி"
என்கிறது புறப்பொருள் வெண்பாமாலை.. அப்படிபட்ட தமிழின் தொன்மையை அறிவது அவ்வளவு எளிதான ஒன்றோ? உலகின் தொல்லியல் ஆராய்ச்சிகள் அனைத்தும் வடக்கிலிருந்தே தொடங்குகிறது.. ஆனால் தமிழின் தொன்மையை அறிய தமிழரின் வாழ்வியல் தெரிய நீங்கள் ஆராய்ச்சியை தெற்கிலிருந்து தொடங்க வேண்டும் என்கிறார்கள் மொழி ஆராய்ச்சியாளர்கள் மாக்ஸ்முல்லர், ம.சோ.விக்டர் போன்றோர்.. தெற்கே எனில் எங்கிருந்து? என்ற கேள்விக்கு கடற்கோள் ஆராய்ச்சியாளர் ஒரிசா பாலு அவர்கள் நாவலந்தீவே தமிழரின் உண்மையான தொன்மையை விளக்கும்.. நாவலந்தீவை மீட்டெடுங்கள் என்கிறார்..

நாவலந்தீவு:

நாவலந்தீவு (அ) குமரிகண்டம் (அ) லெமூரியாகண்டம் என்று அழைக்கப்படும் ஓர் கண்டம் சுமேரியா, ஆஸ்திரேலியா வரை பரவியிருந்த பெருங்கண்டம் ஆகும்.. இந்த கண்டத்திலேயே முதல் மனிதன் தோன்றி பிற்காலத்தில் இடம் பெயர்ந்தனர் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.. இந்த இடத்திலே தான் தமிழ் தோன்றி சீறும் சிறப்புமாக இரண்டு சங்கங்களை நடத்தியது என்கின்றன தமிழ் இலக்கியங்கள்..

முதலாம் நூற்றாண்டில் எழுதிய இறையனார் அகப்பொருள் உரையில் குமரிகண்டம் பற்றியும் தமிழ்ச்சங்கம் பற்றியும் குறிப்பிடுகிறார்.. குமரிகண்டம் 7 பெரும்நாடுகளாகவும் அதில் 7×7=49 சிற்றரசாகவும் இருந்ததாக இலக்கியங்கள் சொல்கின்றன.. முதற்சங்கம் குமரிகண்டத்தில் தோன்றி 4400 ஆண்டுகள் நூற்றுகணக்கான புலவர்களால் வளர்க்கப்பட்ட தமிழ் கடுங்கோன் என்ற மன்னன் காலத்தில் ஆழிப்பேரலை என்ற சுனாமியால் அழிந்தது..

இரண்டாம் தமிழ்ச்சங்கமான இடைச்சங்கம் "வெண்டேர்ச்செழியன்" என்ற பாண்டிய மன்னனால் கபாடபுரத்தில் தோற்றுவிக்கப்பட்டது.. சுமார் 3700 ஆண்டுகள் இயங்கிய இச்சங்கம் மீண்டும் ஆழிப்பேரலையால் அழிந்தது.. மூன்றாம் சங்கமே முடத்திருமாறன் என்னும் பாண்டிய மன்னனால் கூடல்மாநாகர் என்னும் இன்றைய மதுரையில் தோற்றுவிக்கப்பட்டது..

"வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள"
என்று குமரிகண்டம் அழிவைபற்றி சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது..
" நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே" என்று புறநானுறில் அடியார்க்கு நல்லார் பஃறுளி ஆற்றின் பெருமை பாடுகிறார்.. இப்படி பெருமை வாய்ந்த தமிழும் தமிழரும் அழிந்த கொடிய நிகழ்வை நக்கீரனார் முதல் இளங்கோ வரை அனைவரும் குறிப்பிடுகிறார்கள்.. ஆழிப்பேரலையின் எச்சங்களாய் இன்றைய இந்திய நிலப்பரப்பு உருவானதையும் அதில் மீண்டும் தமிழ் வளர்ந்ததையும் குறிப்பிடுகிறார்கள்.. அம்பேத்கார் தன் நூலில் இந்தியத்தை உரிமை கொண்டாட உகந்த இனம் தமிழ்.. அவர்களே நாகர் முதலான இனத்தின் முன்னோடி என்கிறார்.. இப்படி பல வல்லுந‌ர்கள் தமிழின் தமிழரின் தொன்மை என்பது ஏற்றுக்கொண்ட விடயமாகும்..

தொல்காப்பியம் முதல்:

தமிழின் தொன்மையான இலக்கியம் முதலே தமிழும் தமிழரும் இடம்பெறுகிறார்கள்.. அகச்சான்றுகள் பஞ்சமில்லை.. "தமிழென் கிளவி", "செந்தமிழ் நிலத்து" என்பன போன்ற பலவரிகள் தொல்காப்பியத்தில் உள்ளன.. பனம்பாரனார் தம் தொல்காப்பியராயிரத்தில் " தமிழ்கூறும் நல்லுலகத்து" என்று தொன்மையும் பெருமையும் எடுத்துரைக்கிறார்.. " தமிழ் வையைத் தன்னம் புனல்" என்கிறது பரிபாடல்.. இப்படி செந்தமிழ், பைந்தமிழ்,அருந்தமிழ், நறுந்தமிழ், தீந்தமிழ், முத்தமிழ், ஒண்டமிழ், தண்டமிழ், வண்டமிழ், தெளிதமிழ், இன்றமிழ், தென்றமிழ், நற்றமிழ், மூவாத்தமிழ், கன்னித்தமிழ், தெய்வத்தமிழ் என்று தமிழை புகழ்கின்றன தொல்காப்பியமும் எட்டுதொகை நூல்களும்.. சங்க காலத்தில் பதினெண்மேற் கணக்கு நூல்கள் தமிழை வளர்த்தன.. எட்டுதொகை, பத்துபாட்டு போன்றவை இதில் அடக்கம்.. சங்கம் மருவிய காலத்தில் பதினெண்கீழ்கணக்கு போன்ற தொகுப்புகள் தமிழை வளர்த்தன.. இதில் திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்கள் அடக்கம்..

பக்தி இலக்கியங்கள்:
பல்லவர் காலத்தில் பக்தி இலக்கியங்கள் தோன்றின.. சமணம், பௌதீகம், சைவம், வைணவம் போன்ற நெறி சார்ந்த பெரியோர் இலக்கியத்தின் வழியே நெறியை பரப்ப ஆரம்பித்தனர்.. அதற்காக எண்ணில் அடங்கா பக்தி இலக்கியங்கள் தோன்றின.. நாயன்மார்கள் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருமந்திரம், பெரியபுராணம் போன்றவற்றை இயற்றினர்.. ஆழ்வார்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம் இயற்றினர்.. தங்கள் இறைவனை புகழவும் வழிபடவும் அவற்கள் பக்தி பாக்களை பயன்படுத்தினர்.. 16 நூற்றாண்டுவரை பக்தி இலக்கியமே தமிழை வளர்த்தது..

அதன்பின் ஆங்கிலேயர் காலத்தில் பாரதியார், பாரதிதாசன் போன்றோர் தமிழையும் புரட்சியையும் இணைத்து வளர்த்தனர்.. வள்ளலார், மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார்,தேவநேயபாவணர், பெருஞ்சித்திரனார் போன்றோர் தனித்தமிழ் இயக்கம் மூலமும் தனித்தமிழ் கவிதைகள், இலக்கியங்கள், செய்யுள்கள் மூலம் தமிழ் வளர்த்தனர்..

தமிழ் எழுத்து வடிவம்:

தமிழ் எழுத்துகள் பல பரிணாம வளர்ச்சியை பெற்றுள்ளன..
சித்திர எழுத்து, தன்மையெழுத்து, உணர்வெழுத்து, ஒலியெழுத்து என்பன ஆகும்.. இதில் சித்திர எழுத்தின் மூலமாய் சிந்து நாகரீகம் உள்ளது.. ஒலியெழுத்தின் இலக்கணமாய் தொல்காப்பியம் உள்ளது.. ஏனைய வடிவங்கள் இன்றும் சான்று இன்றி உள்ளன..

வட்டெழுத்துகள்:
சங்க காலத்தில் பயன்படுத்திய தமிழி எழுத்துக்கள் சங்கம் மருவிய காலம் முதல் பிற்கால சோழர்கள் காலம்வரை வட்டெழுத்தாக மாற்றம் பெற்றன.. இதை ஏட்டிலும் கல்வெட்டிலும் பதிக்க ஏதுவாகவே மாற்றம் பெற்றது என்றும், இல்லையில்லை.. அவர்களின் எழுத்துமுறையே இதுதான் என்று இருவேறு கருதுகோள்கள் இங்கே உள்ளன.. அதன் பின்பே நாம் நடைமுறையில் பயன்படுத்தும் எழுத்துமுறை வந்தது.. இடையில் சில மாற்றங்கள் பெற்றாலும் பெரிதாக பாதிப்பு இல்லாமல் வேறுபாட்டை எளிதில் அறியும் வண்ணமே இருந்தன..

தமிழும் தமிழக வரலாறும் தொல்லியல் மற்றும் அகச்சான்று இன்றி முழுமை பெறாமல் உள்ளன.. என் கட்டுரையும் அது போல் ஒன்றே.. கீழடி போல், ஆதிச்சநல்லூர் போல் கபாடபுரமும் ஒருநாள் வெளிவரும் என்று நம்புவோமாக...
?????????



View attachment View attachment View attachment
 
Top