• Please use an working Email account to verify your memebership in the forum

பனை மரம்

Semmozhi

Well-known member
Messages
330
Points
93

Reputation:

#பனைவிதைப்போர்_கவனத்திற்கு...!!!

பாலை வனத்தில் பனை மரம் வளராது. ஆனால் பனை மரம் ஒரு வறண்ட நிலப் பயிர். ஆயிரம் அடிக்கும் கீழே சென்று தண்ணீரை உறிஞ்சி வைத்துக்கொள்ளும். ஒரு கிணற்றைச் சுற்றி பத்து பனை மரம் இருந்தால் கடைசி வரைக்கும் அந்தக் கிணற்றில் தண்ணீர் வற்றாது. வற்ற விடாது. அந்தப் பனை மரம் கழுத்து முறிந்து சாகிறதென்றால் உன் நாடு பாலை வனமாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதை நீ புரிந்துகொள்" என்பது நம்மாழ்வாரின் கருத்து. பனை மரங்கள் காக்கப்பட வேண்டும் என்பதும் நம்மாழ்வாரின் தீராத ஆசைகளில் ஒன்று.

அதற்கு ஏற்றார்போல் உலகின் மூத்த மொழியான தமிழ்மொழியை பனை ஓலையில் எழுதி வைத்தனர், நம் முன்னோர். அதனால்தான் என்னவோ தமிழர்கள் வாழும் பகுதிகளான மலேசியா, இலங்கை, மொரீசியஸ் தீவு ஆகிய நாடுகளில் பனை மரங்கள் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன. அம்மரத்துக்காகத் தனி ஒரு துறையை அமைத்து அதற்கு ஓர் அமைச்சரையும் நியமித்து பனை வளர்ச்சி வாரியத்தை இலங்கை அரசு நடத்தி வருகிறது (இங்கே நீர் வளத் துறைக்கே தனி அமைச்சர் இல்லை). நம் தமிழ்நாட்டின் மாநில மரம், பனை மரம். இன்று அது அழிவின் விளிம்பில் உள்ளது. கடந்த 25 முதல் 30 ஆண்டுகளுக்கு முன்புவரை பனைத்தொழில் கொடிகட்டிப் பறந்த இடமும் தமிழகம்தான். பனை மரங்களில் இருந்து கிடைக்கும் பொருள்களான ஓலைகள், பனை விதைகள், நுங்குகள், பழம், கிழங்கு, எண்ணெய், பதநீர், பனங்கள், வெல்லம் எனப் பல பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்யும் வரை பனைத்தொழில் நன்றாகத்தான் இருந்தது.

பனை விதைகள்

டாஸ்மாக்கை வெற்றிகரமாக நடத்துவதற்காக முதன்முதலில் அரசாங்கம் கைவைத்ததும் பனைமரத்தில்தான். பனை மரத்தில் கள்ளுக்காக மரம் ஏறும் வரை கள்ளோடு சேர்த்து ஓலைகள் முதல் பழம், கிழங்கு, நுங்கு உள்ளிட்ட பொருள்கள் அனைத்தையும் சேர்த்து எடுப்பது வழக்கம். கள் இறக்குமதி செய்யத் தடை செய்யப்பட்டதால் நாளடைவில் பதநீர் எடுக்கும் தொழிலுக்காக மட்டுமே தொழிலாளர்கள் மரம் ஏறத் துவங்கினர். அப்போது குளிர்பான மோகம் அதிகமாக இருந்ததால் பதநீரை மக்கள் குறைவான அளவிலேயே எடுத்துக்கொண்டனர். இதனால் நாளடைவில் மரமேறும் ஆட்களும் குறையத் தொடங்கி, பனைப் பொருள்கள் தயாரிப்பும் குறையத் தொடங்கியது. இதனால் பனை மரங்கள் அழிவினைச் சந்திக்க நேர்ந்தது. தமிழ்நாட்டில் உள்ள ஏரிக்கரைகளிலும், வயல் வரப்புகளிலும் அதிகமாக நடப்பட்டிருந்ததும் இம்மரங்கள்தான். பனை மரங்கள் வருடம் மும்மாரியை அள்ளிக் கொடுக்கும். அவற்றின் அழிவுக்குப் பின்னர்தான் மும்மாரி, இருமாரி ஆகி, இப்போது உருமாறி ஒரு மாதிரியாகிவிட்டது. இந்நிலையில், பனை மரங்களைக் காக்க வாட்ஸ்அப்பில் குரூப் ஆரம்பித்தும், சமூக வலைத்தளங்களின் மூலமாகவும் பனை விதைகளை இலவசமாக வழங்கி வருகிறார், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரேம் ஆனந்த் என்ற இளைஞர்.

பிரேம் ஆனந்த்

பனை விதைகளை இலவசமாக வழங்குவது குறித்த தகவல்களை ஆனந்தன் நம்மிடம் பகிர்ந்துகொண்டார். "நான் பொறியியல் பட்டப்படிப்பு படித்திருக்கிறேன். படிப்பை முடித்துவிட்டு பெங்களூரில் வேலை செய்துவந்தேன். சிறு வயதில் இருந்தே விவசாயக் குடும்பத்தில் வளர்ந்ததால் வேலையில் கவனம் போகவில்லை. வேலையை ராஜினாமா செய்துவிட்டு நிலத்துக்கே திரும்பிவிட்டேன். அதன்படியே கடந்த நான்கு வருடமாக இயற்கை வழி விவசாயம் செய்துவருகிறேன். பாரம்பர்ய விதைகள், நாட்டு மாடுகள், நாட்டுக் கோழி இனங்கள் என அனைத்தையும் பாதுகாத்து வருகிறேன். சந்தைக்குப் போகிற நாட்டு மாடுகளை மீட்டெடுத்து, நாட்டு மாடு தேவைப்படும் நண்பர்களுக்கு கொடுக்கிறேன். இதுபோக என்னிடம் 300 பனை மரங்கள் இருக்கின்றன. இதில் 200 மரங்கள் பெண் மரங்கள், ஆண்டுதோறும் நுங்கிற்காக விட்டுவிடுவேன். இந்த வருடம் மழை வந்தால் உபயோகமாக இருக்கும் என எண்ணி, விதைக்கு விட்டுவிட்டேன். கடந்த வருடம் சிறிதளவு பனை விதைகளை எடுத்து எங்கள் கிராமத்தில் உள்ள ஏரிகளிலும், வயல் வரப்புகளிலும் நட்டு வைத்தேன். இந்த வருடம் என்னுடைய தேவைக்கு அதிகமாக விதைகள் கிடைத்ததால் தமிழகம் முழுவதும் கேட்கும் அனைவருக்கும் கொடுத்து வருகிறேன். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நானே 12,000 விதைகளை நடவு செய்திருக்கிறேன். பனை மீது ஆர்வமுள்ள குழுக்கள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் பனை விதைகளைக் கொடுத்து வருகிறேன். பனை விதைகள் அனைத்தும் இலவசம்தான்" என்றவர் தொடர்ந்தார்.

விதைகள்

"தமிழ்நாட்டில் பனை பற்றிய விழிப்புஉணர்வு போதுமானதாக இல்லை. மழையை வரவழைத்து ஏரி, குளங்களை நிரம்ப வைத்து விவசாயத்தை வாழ வைத்தது, பனை மரம்தான். பனை மரம் கடும் வறட்சியிலும் வளரக்கூடியது. ஒரு கிணற்றை வற்றாமல் தடுக்க, கிணற்றைச் சுற்றி பத்து பனை மரங்கள் வளர்த்தாலே போதும். என் கிணற்றைச் சுற்றி இருக்கும் பனை மரங்களால்தான் ஊரே வறட்சியில் இருக்கும்போதும் என் கிணற்றில் தண்ணீர் இருந்து கொண்டு இருக்கிறது. இது தவிர பனை மரங்கள் ஏராளமான பொருள்கள் தயாரிக்க உறுதுணையாகவும் இருந்தது. எங்கள் பகுதியில் வந்த செங்கல் சூளைகளால் பனை மரங்கள் பெரும்பாலானவை அழிவைச் சந்தித்தன. என்னிடம் இருக்கும் பனை மரங்கள் 60 வருடங்கள் பழமையானவை. என் தாத்தா காலத்தில் வைக்கப்பட்டவை. இப்போது அதன் முழுமையான பலனை நான் அனுபவித்து வருகிறேன். இதற்காக வாட்ஸ்அப்பில் குழுக்கள் அமைத்து பனை விதைகளைக் கொடுத்து வருகிறேன். கடந்த வருடம் 4 ஆயிரம் விதைகள் கொடுத்தேன். இந்த வருடம் 37 ஆயிரம் விதைகளைத் தமிழகம் முழுவதும் கொடுத்துள்ளேன். அதிகமானோர் பனை விதைகளைக் கேட்டு வர ஆரம்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கொடுக்கும்படியான ஏற்பாடுகளைச் செய்துவருகிறேன். இதுபோக வறட்சிக் காலத்தில் பனம்பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து மாடுகளுக்குக் கொடுத்தேன். அதேபோல, பனம் விதைகளைத் தொட்டியில் ஊறவைத்து வயலுக்கு தழைச்சத்தாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்" என்றார்.

விதைகள் வேர் ஊன்றட்டும், பனை மரங்கள் பாதுகாக்கப்படட்டும். பனை என்பது வெறும் மரம் மட்டுமல்ல, தமிழரின் அடையாளமும் கூட!

தொடர்புக்கு: 98945 95869 - பிரேம் ஆனந்த்View attachment
 
Top