• Please use an working Email account to verify your memebership in the forum

தமிழர் பண்பாடும், பொங்கல் திருநாளும்

Semmozhi

Well-known member
Messages
330
Points
93

Reputation:

தமிழர் பெரும்பண்டிகை என உலகின் அனைவராலும் அறியப்பட்ட பண்டிகையாக பொங்கல் திருநாள் உள்ளது.. மதம், சாதி போன்ற வேற்றுமை அனைத்தும் நீங்கி தமிழ்மொழி என்ற குறியீட்டின் வழியே இணைக்கப்பட்டு, உலகம் முழுவதும் ஒருசேர கொண்டாடப்படும் பண்டிகையாக பொங்கல் திருநாள் உள்ளது..

தைப் பொங்கல், அறுவடைத் திருநாள் என கூறப்படும் பொங்கல் பண்டிகை, தமிழர் பண்டிகை ஆகும். பொங்கல் என்பதற்கு சாப்பிடும் பொங்கல் என்று பொருள் அல்ல. பொங்கிப் பெருகி வருவது என்று பொருள்.

தமிழர்கள் இருக்குமிடமெல்லாம் பொங்கல் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் தாயகமான தமிழ்நாட்டில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, மலேசியா, கனடா, சிங்கப்பூர், இலங்கை, மொரீஷியஸ் உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளிலும் கூட விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

தோற்றம்...

பொங்கல் பண்டிகையின் தோற்றம் எப்போது என்று உறுதியாகத் தெரியவில்லை. 1000 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது இந்த பண்டிகை ஒன்று ஒரு கூற்று உள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இது கொண்டாடப்படுகிறது என்று இன்னொரு கூற்றும் உள்ளது.

சோழர் காலத்தில் பொங்கல் பண்டிகைக்கு புதியீடு என்று பெயர் இருந்தது. அதாவது, ஆண்டின் முதல் அறுவடை என்று அதற்குப் பொருள். உழவர்கள் தை மாதத்தின் முதல் நாளில், அந்த ஆண்டின் முதல் அறுவடையை மேற்கொள்வது வழக்கமாக இருந்தது. இதுதான் பின்னர் பொங்கல் பண்டிகையாக மாறியது என்கிறார்கள்.

போகி...
`பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்பதற்கேற்ப, வீட்டிலுள்ள தேவையற்ற பழைய பொருட்களை நீக்க வேண்டும். அதற்கு பதிலாக புதிய பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை நமது முன்னோர் வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு உதாரணமாக, குயவர்களுக்கு வாழ்வளிக்கும் வகையில், பழைய மட்பாண்டங்களை (பானைகள், குடிநீருக்காக பயன்படுத்தும் குவளைகள்) போகி பண்டிகையன்று உடைத்துவிட்டு, தைத்திங்கள் முதல் புதிய பானைகளில் சமைக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது.
இதன்மூலம் மண்பாண்டங்கள் செய்து பிழைப்பு நடத்துவோருக்கு வருவாய் கிடைக்கும். அத்துடன், புதிய பானைகளின் வரவால், மனதிற்கு புத்துணர்ச்சி ஏற்படும். மண்பானைகளில் சமைக்கப்படும் உணவு வகைகளுக்கு தனி சுவையுண்டு என்பதை அவற்றை சாப்பிட்டு ருசித்தவர்கள் நன்கு அறிவார்கள். அதுபோல், பழைய விரும்பத்தகாத சம்பவங்கள் எல்லாம் தொலைந்து, தைத்திங்கள் முதல் அவை நல்லவையாக நிகழ வேண்டும் என முன்னோர் வலியுறுத்துவர்.


கலையை பரப்புதல்

தற்போதைய தகவல்-தொழில்நுட்ப காலத்தைப் போலல்லாமல், தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாத அந்நாட்களில், பரம்பரை பரம்பரையாக ஒரு சில குடும்பங்களுக்கே தெரிந்த தங்களின் பாரம்பரிய கலைகளை இளைய தலைமுறையினருக்கு பயிற்றுவித்து, வழிவழியாக அந்தக் கலைகள் சென்று சேரும் விழாவாகவும் பொங்கல் விழா இருந்து வந்துள்ளதை அறிகிறோம்.

தவில், சிலம்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், நாதசுரம் இன்னிசை, வாய்ப்பாட்டு, வீணை உள்ளிட்ட தந்தி இசைக்கருவிகளை இசைத்தல், சிலேடையுடன் கூடிய பேச்சுக்கலை, நகைச்சுவை நிகழ்ச்சி என ஒவ்வொரு குடும்பத்திற்கும், அவர்கள் சார்ந்துள்ள சமூகத்திற்கும் உரிய பாரம்பரிய கலைகளை வளர்ப்பதற்காகவும் இப்பண்டிகையை காலங்காலமாக நம் முன்னோர் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். இதனால் பிரத்யேக கலைகள் ஒரு தலைமுறையுடன் முடிந்து விடாமல் அடுத்தடுத்த சந்ததியினருக்கும் சென்று சேர்ந்துள்ளது.

வீட்டுப் பொங்கல்...

2வது நாளான பொங்கல், விசேஷமானது. தை மாதப் பிறப்பு நாள் இது. சர்க்கரைப் பொங்கல் என்று இந்த பண்டிகைக்குப் பெயர்.

புதுப்பானை எடுத்து, மஞ்சள் உள்ளிட்டவற்றை பானையைச் சுற்றிக் கட்டி, புதுப் பாலில், புது அரிசியிட்டு, வெல்லம்

உள்ளிட்டவற்றைக் கலந்து பொங்கலிடுவார்கள்.

வீட்டுக்கு வெளியே சூரியன் இருக்கும் திசையை நோக்கி இந்த பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெறும்.

அரிசி நன்கு சமைந்து, பொங்கி வரும்போது குலவையிட்டும், பொங்கலோ பொங்கல், பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக என்ற குரலோடு பொங்கல் பானையை இறக்க வேண்டும்.

நன்கு பொங்கி வந்தால் அந்த ஆண்டு முழுவதும் நல்ல வளமும், நலமும் நிலவும் என்பது ஐதீகம்.


மாட்டுப் பொங்கல்...

3வது நாள் விழா மாட்டுப் பொங்கல்.

கிராமங்கள் தோறும் மாட்டுப் பொங்கள் விமரிசையாக கொண்டாடப்படும்.

வீடுகள் புதுப் பூச்சு காணும். மாடுகள், பசுக்களின் கொம்புகளுக்கு புது வர்ணம் பூச்சி, நன்கு குளிப்பாட்டி, அவற்றை அலங்காரம் செய்து, மாட்டுப் பொங்கல் தினத்தின்போது படையலிட்டு வழிபாடு செய்வார்கள். பின்னர் மாடுகளுக்கு பொங்கலும் அளிக்கப்படும்.

ஆண்டெல்லாம் நமக்காக உழைக்கும் மாடுகளுக்கு நன்றி கூறும் தினமாக இது கொண்டாடப்படுகிறது.

இன்றைய தினத்தின்போது மாடுகளுக்கு ஒரு வேலையும் தர மாட்டார்கள். கழுத்தில் புது மணி கட்டி, கொம்புகளை சீவி விட்டு சுதந்திரமாக திரிய விடுவார்கள்.

இந்த இடத்தில்தான் ஜல்லிக்கட்டு தோன்றியிருக்கிறது. மாட்டுப் பொங்கலின்போது கிராமங்கள் தோறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

பல்வேறு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்கள் விளையாடப்படும். அதிலும் அந்த விளையாட்டுக்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொருவரின் வீரத்தையும் மதிப்பிடும் வகையில் இருக்கும்.

இளவட்டக்கல்

அக்காலத்தில் இந்த விளையாட்டானது விளையாடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த விளையாட்டு மறைந்துவிட்டது. பொதுவாக இந்த இளவட்டக்கல் விளையாட்டானது, ஒவ்வொருவரின் வலிமையை வற்புறுத்தும் வகையில் இருக்கும். இதில் ஆண்கள் பெண்கள் என இருபாலரும் விளையாடுவார்கள். அதுமட்டுமின்றி, சிலர் இந்த விளையாட்டில் ஒரு குறிப்பிட்டக் கல்லை தூக்கும் பலசாலிக்கு தன் மகளை மணமுடித்து வைப்பதாகவும் வாக்கு கொடுப்பர். ஏனெனில் அக்காலத்தில் வலிமையானவருக்கு தான் பெற்றோர்கள் திருமணம் முடித்து வைப்பார்கள். ஆனால் தற்போது இந்த விளையாட்டு மறைந்துவிட்டது என்பதைவிட, பலர் மறந்துவிட்டார்கள் என்று சொல்லலாம்.

View attachment
கபடி

இந்த விளையாட்டு பல கிராமங்களில் இன்றும் நடைபெற்று வருகிறது. அதிலும் இந்த விளையாட்டில் பங்குபெறுவோர் நிச்சயம் வெற்றியைப் பெற வேண்டும் என்று மிகவும் பாடுபடுவர். ஏனெனில் இந்த விளையாட்டு ஊர்களுக்கிடையே நடைபெறுவதால், பலர் மிகவும்
ஆர்வத்துடன் விளையாடுவர்.

View attachment
ரேக்ளா ரேஸ்

ரேக்ளா ரேஸ் என்றால் மாட்டு வண்டி பந்தயம். இந்த பந்தயம் இன்றும் பல கிராமப்புறங்களில் கொண்டாடப்படுகிறது.
View attachment
ஜல்லிக்கட்டு

பாரம்பரிய விளையாட்டுக்களில் அன்று முதல் இன்று வரை அழியாமல் கொண்டாப்பட்டு வரும் விளையாட்டு என்றால் அது ஜல்லிக்கட்டு தான். அதிலும் இந்த விளையாட்டு தமிழ்நாட்டில் இருக்கும் அலங்காநல்லூரில் நடைபெறும். இதில் காளைகளை நன்கு வளர்த்து, அந்த காளையின் கொம்புகளில் பணமூட்டையை கட்டிவிட்டு, காளையை அடக்கி, அந்த பொன்மூட்டை எடுக்க வேண்டும். இது மிகவும் ஆபத்தான விளையாட்டு. இன்றும் இந்த விளையாட்டைத் தான் பெரும்பாலான இளம் தலைமுறையினர் விரும்பி விளையாடுவார்கள்.
View attachment
உறியடி

இதுவும் ஒருவித பொங்கல் விளையாட்டுக்களில் ஒன்று. இதில் மேலே தொங்கும் பானையை, எந்த தடங்கல் வந்தாலும் முயன்று உடைக்க வேண்டும். இது மிகவும் சுவாரசியமாக இருக்கும். ஏனெனில் இந்த பானையை உடைக்க அருகில் செல்லும் போது, உடைப்பவர்களின் முகத்தில் தண்ணீர் ஊற்றி, அவர்களின் கவனத்தை திசை திருப்புவார்கள்.
View attachment உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்.
 
Last edited:
Top