• Please use an working Email account to verify your memebership in the forum

தமிழர் கடல் வணிகம்- திரைமீளர்கள்

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

தமிழர்கள் செல்வம் ஈட்டும் தொழிலில் கடல் வணிகம் முக்கியமான ஒன்று.. இவர்களை திரைமீளர்கள் என்று அழைத்தனர்.. இன்றும் இந்த பெயர் குமரி மாவட்ட மக்களிடையே வழக்கத்தில் உள்ளது.. பண்டைய திரைமீளர்களின் பெருமைமிகு வரலாற்றை இந்த பதிவில் காண்போம்... அதற்கு முன்பு சங்க இலக்கியம் பற்றிய தெளிவு பெறுவோம்..

நம் வரலாற்றை நாம் சங்க இலக்கியத்தின் வாயிலாகவே அறிகிறோம்.. சங்க இலக்கியமே பண்டைய வரலாற்றை நமக்கு காட்டும் கண்ணாடியாக உள்ளது.. சங்க இலக்கியம் பொய் உரைக்கலாம் என்று தோன்றலாம்.. அது தவறு.. தமிழ் சங்கத்தில் ஒரு நூல் அரங்கேற்ற வேண்டுமாயின் அங்கே உள்ள மற்ற புலவர்கள் அதை ஆராய்ந்து ஏற்றுகொள்ள வேண்டும்.. உலகப்பொதுமறை என நாம் கொண்டாடும் திருக்குறளே முதல்முறை சங்கத்தில் நிராகரிக்கப்பட்டு பின்பு அரங்கேறியதே.. எனவே அங்கே பொய் உரைத்தால் அந்த நூல் மற்ற புலவர்களால் நிராகரிக்கப்படும்.. எனவே முழுமையாக சங்க இலக்கியத்தை நம்பலாம்.. புகார் என்னும் நகரம் இன்று கிடையாது.. அது கடலடியில் உறங்குகிறது என்னும் உண்மையை கூறியதே நமக்கு இலக்கியங்களே.. அதன் வழியே தான் நாம் அதை தொல்லியல் ஆய்வில் கண்டறிந்தோம்..சரி.. இப்பொழுது பதிவிற்கு செல்வோம்..

கி.மு இரண்டாம் நூற்றாண்டு என சொல்லப்படும் பட்டினப்பாலை பாடல்கள் கடல் வணிகம் பற்றி பல குறிப்புகளை கொடுக்கிறது.. அதில் ஒருபாடலில் புகார் வணிகர்களின் நேர்மை மற்றும் தொழில் முறை பற்றி சொல்கிறது..

" நெடுநுகத்துப் பகல்போல நடுவுநின்ற நல்நெஞ்சினார்
வடுஅஞ்சி வாய்மொழிந்து தமவும் பிறவும் ஒப்ப நாடி
கொள்வதும் மிகைகொளா கொடுப்பதும் குறைகொடாது
..... மொழிபல பெருகிய பழிநீர் தேஎத்துப்
புலம்பெயர் மாக்கள் கலந்துஇனி துறையும்"
-பட்டினப்பாலை (வரிகள் 206-217)

புகார் வணிகர்கள் நடுநிலை தவறாதவர்களாகவும், பழிக்கு அஞ்சியவராகவும், தம்மையும் பிறரையும் ஒன்றாக மதிப்பவராகவும், பொருள் கொடுக்கும் போது குறையாமலும் பெறும் போது மிகாமலும் பெற்றனர் என்கிறது இந்த பாடல்.. மேலும் பலநாடுகளின் மக்களும், வணிகரும் இன்பமாய் வந்து செல்லும் இடம் புகார் என்கிறது இப்பாடல்.. மற்றொரு பாடல் அங்கே ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களை விவரிக்கிறது.. எந்த எந்த நாட்டின் பொருட்கள் இருந்தன என்று...

" நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த பொன்னும் மணியும் குடமலைப் பிறந்த ஆரமும்
அகிலும் தென்கடல் முத்தும் குணக்கடல்துகிரும் கங்கை வாரியும்
காவிரிப்பயனும் ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும் அரியவும்
பெரியவும் நெரிய ஈண்டி வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகு"
பட்டினப்பாலை ( வரிகள் 185-193)

இப்படி பலநாட்டு பொருட்களும் இருந்ததை சொல்கிறது இந்த பாடல்..
மேலும் ஒரு பாடல் இன்றைய காலம் போலவே அன்றும் சோழர்கள் சுங்கம் வைத்து ஏற்றுமதி இறக்குமதி பொருட்களுக்கு வரி வசூலித்ததையும், அந்த பொருட்களுக்கு புலிச்சின்னம் பொறித்து அனுப்பும் முறையையும், அந்த சுங்கத்தில் பொருட்கள் மலைபோல் குவிந்து இருப்பதையும் விவரிக்கிறது..

" நீரினின்று நிலத்துஏற்றவும் நிலத்தினின்று நீர்பரப்பவும்
அளந்தறியாப் பலபண்டம் வரம்புஅறியாமை வந்துஈண்டி
அருங்காடிப் பெருங்காப்பின் வலியுடை வல்அணங்கினோன்
புலிபொறித்துப் புறம்போக்கி மதிநிறைந்த மலிமண்டபம்
பொதிமூடைப் போர் ஏறி"
- பட்டினப்பாலை (வரிகள் 129-137)

மேலும் புறநானூறு பாடல் ஒன்றில்

" கூம்பொடு மீப்பாய் களையாது மிசைபரந்
தோண்டாது புகாஅர்ப் புகுந்த பெருங்கலத்
தகாஅர் இடைப்புலப் பெருவழிச் சொரியும்
கடல்பல் தாரத்த நாடுகிழ வோய"
- புறநானூறு-30 (வரிகள்10-15)

பாய் மடிக்காத மிக வேகமாய் வரும் கப்பல்கள் புகார் துறைமுகத்தினுள் வரும்.. அதன் பொருட்டு பெரும் செல்வம் கடலில் சில நேரம் விழுவதும் உண்டு.. அதையெல்லாம் பொருட்படுத்தாது வாணிபம் செய்யும் செல்வந்தர்கள் நிறைந்த சோழநாட்டின் அரசன் என சோழன் நலங்கிள்ளியை பற்றி பாடியுள்ளார் உறையூர் முக்கண்ணன் சாத்தனார்... மேலும் இந்திய கடற்படையில் வேலைசெய்த, வரலாற்று அறிஞர் நரைசய்யா என்பவர் கடல்வழி வணிகம் என்ற புத்தகம் எழுதியுள்ளார்.. அதில் அவர் ஒரு கப்பல் துறைமுகத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு எடுத்துக்கொள்ளும் நேரம் பொறுத்தே அந்த துறைமுகத்தின் மதிப்பீடு உயரும்.. குறைந்த நேரத்தில் இவற்றை முடிக்க அந்த துறைமுகத்தின் உள்கட்டமைப்பு சரியாக இருக்க வேண்டும்.. புகார் துறைமுகம் அத்தகைய சிறப்பு வாய்ந்த துறைமுகம் என்கிறார் இவர்..

View attachment

இந்த அகநானூறு பாடலில் வணிக நோக்கில் சென்ற தலைவன் திரும்பி வரும் நாளை எண்ணி வாடும் தலைவி தன் தோழியிடம் சொல்வதாக பாடுகிறார் மாங்குடி மருதனார்... மற்றொரு புறநானூறு பாடலில் கோவூர்கிளார்..

" இருங்கழி யிழிதரும் ஆர்கலிவங்கம் தேறுநீர்ப் பரப்பின்
யாறுசீத்துய்த்துத்
துறைதோறும் பிணிக்கு நல்லூர், உறைவின் யாணர்,
நாடுகிழ வோனே"
-புறநானூறு-400

ஆறுகள் கடலில் இணையும் இடத்திலிருந்து வங்கம் என்னும் படகை செலுத்தி அனைத்து நாடுகளிலும் வணிகம் செய்து பெரும் செல்வம் சேர்த்த வணிகர்கள் பலரை கொண்ட நாட்டை ஆளும் அரசனே என்கிறார் புலவர்.. அதே போல் சாதுகன் என்னும் வணிகன் காவேரிபூம்பட்டிணத்தில் இருந்து ஜாவா நாட்டிற்கு செல்லும் போது ஏற்பட்ட புயலினால் நாகர்மலை பக்கத்தில் அவன் கப்பல் கவிழ்ந்ததாகவும் அவன் ஒரு மரத்தை பற்றிக்கொண்டு அந்த தீவிற்கு சென்று தஞ்சம் அடைந்ததாகவும் மணிமேகலையில் ஒரு பாடல் குறிப்பிடுகிறது..

" நளியிரு முந்நீர் வளிகலன் வௌவ;
ஒடிமரம் பற்றி, ஊர்திரை உதைப்ப,
நக்க சாரணர், நாகர் வாழ்மலைப்
பக்கஞ் சார்ந்தவர் பான்மையன் ஆயினன்;"
- மணிமேகலை- 16 ; (13-16)

மேலும் தங்கள் வணிகர் மேல் மற்ற நாட்டு மன்னர்களோ கடற்கொள்ளையர்களோ தாக்குதல் நடத்தினால் அவர்களை ஒடுக்கும் பொருட்டு பல தமிழ் மன்னர்கள் போர் புரிந்துள்ளனர்.. உதாரணமாக கிமு மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியன் முதுகுடுமி பெருவழுதி பற்றி புறநானூறில் காரிகிளார் பாடிய பாடலில்

"செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்துக்
கடற்படை குளிப்ப மண்டி"
-புறநானூறு - 6(வரிகள் 11,12)

வணிகருக்காக இடையூறு செய்தவரை ஒடுக்க பெரும் கடற்படையையே அனுப்பினான் என்கிறார் புலவர்.. மேலும் அரபிக்கடல் பகுதியில் கடல்துறுத்தி என்ற தீவில் கடற்குரும்பர்கள் என்பவர்களால் யவணநாட்டு கப்பல்கள் முசிறி துறைமுகம் வருவது குறைந்தது.. அன்று சேரநாட்டை ஆட்சி செய்த இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தன் மகன் சேரன் செங்குட்டுவனை பெரும்படையுடன் அனுப்பினான்.. சேரன் செங்குட்டுவன் அவர்களை வென்று அங்கிருந்த பெரிய கடம்பமரத்தை வெட்டி அதன் அடிப்பாகத்தில் முரசு செய்து அதில் தன் வெற்றியை அறிவித்துகொண்டே நாட்டை அடைந்தான் என்றும் பதிற்றுபத்து பாடல்கள் குறிப்பிடுகின்றன.. மேலும் மாரோகத்து நப்பசலையார் என்ற பெண்புலவர் சேரன் மலையமான் குறித்து இயற்றிய பாடலில்

" சினமிகு தானை வானவன் குடகடல்பொலந்தரு நாவாய் ஓட்டிய
அவ்வழிப்பிறகலம் செல்கலாது அனையேம்"
- புறநானூறு 126(வரிகள் 14- 16)

மேற்கு கடலில் சேரன் தன் பெருங்கப்பலை செலுத்தும் போது வேறு எவரும் தன் கலன்களை அங்கே செலுத்த இயலாது என்கிறார் புலவர்..

மேலும் தமிழர்கள் கங்கைகரை பகுதி முழுமைக்கும் வணிகம் செய்துள்ளனர்.. கலிங்க நாட்டின் தாமிரலிபதி, பாலூர், பித்துண்டா போன்ற துறைமுகங்கள் தமிழரின் பொருட்களே மதிப்பு பெற்று விளங்கியதை அத்திகும்பா கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.. மேலும் யூதநாட்டின் அரசன் சாலமோன் தமிழகத்தின் தேக்கு பொருட்களை பயன்படுத்தியதாக அவர்கள் மதநூல்களே குறிப்பிடுகின்றன.. இப்படி தமிழர்களின் வணிகம் பற்றி நமக்கு கிடைக்கும் சான்றுகள் அனைத்தும் கடைச்சங்க நூல்களில் கிடைத்தவை மட்டுமே.. முதற்சங்க நூல்கள் கிடைக்காததும் குறிப்பிடதக்கது..
???????
 

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

வெண்ணிபரந்தலை என்னும் இடத்தில் நடந்த போரில் சோழன் கரிகால் பெருவளத்தானுக்கும் சேரமான் பெருஞ்சேரலாதனுக்கும் இடையே நடந்த போரில் சோழன் எய்த அம்பு சேரனின் மார்பில் பாய்ந்து முதுகை தொட்டது.. இதை புறமுதுகு எனும் அடையாளமாய் எண்ணிய சேரன் வடக்கிருந்து உயிர் நீத்தான்.. இதை பாடிய பற்றி பாடிய வெண்ணி குயத்தியார் எனும் பெண்பாற் புலவர்

" நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி,
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக"
- புறநானூறு - 66

என்கிறார்.. அதாவது காலம் காலமாய் கடலில் படகு செலுத்தி கடலை கட்டி ஆண்ட சோழ மன்னனே.. உன்னை விட சேர மன்னன் நல்லவன்.. மற மாண்பு உள்ளவன்.. என்று சேர புலவர் பாடுகிறார்.. முதற் சங்கம் பற்றிய தகவல்கள் ஆங்காங்கே கடைசங்க நூல்களில் குறிப்பாய் உள்ளன.. மற்றபடி இன்னும் முதற்சங்க நூல்கள் கிடைக்கவில்லை..
 
Top