• Please use an working Email account to verify your memebership in the forum

*எறும்பு எனும் விவசாயி*

Semmozhi

Well-known member
Messages
330
Points
93

Reputation:

*எறும்பு எனும் விவசாயி*

*விவசாயத்துக்கு மட்டும்*

விவசாயத்தை நாம்தான் கண்டுபிடித்தோம் என்றும் அதனால் எவ்வளவு புத்திசாலிகள் நாம் என்றும் மனிதர்களாகிய நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், விவசாயத்தை நாம் கண்டுபிடிக்கவில்லை.

புல்வெளிகளில் பூஞ்சைத் தோட்டங்கள்

தென்னமெரிக்காவின் மழைக்காடு ஒன்றில் பல கோடி ஆண்டுகளுக்கு முன், குண்டூசி முனையளவே மூளையைக் கொண்டிருந்த சிறுசிறு எறும்பினங்கள் நமக்கும் முன்பே விவசாய வழிமுறைகளைக் கண்டறிந்துவிட்டன. தங்கள் உணவுத் தேவைக்காக அந்த எறும்புகள் பூஞ்சைகளைப் பயிரிட ஆரம்பித்தன. ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு சிக்ஸலப் வால் நட்சத்திரம் பூமியின் மீது மோதியதால் பூமியின் நான்கில் மூன்று பங்கு அழியக் காரணமாக இருந்த பேரழிவு ஏற்பட்டது. அதிலிருந்து கொஞ்ச காலத்திலேயே அந்த எறும்புகள் விவசாயத்தைக் கண்டுபிடித்தன என்பதுதான் சிறப்பு.

இன்றைக்குச் சுமார் 250 எறும்பினங்கள் அமெரிக்கக் கண்டங்களின் மழைக்காடுகள், பாலைவனங்கள், புல்வெளிகளில் பூஞ்சைத் தோட்டங்களைப் பயிரிடுகின்றன. தட்பவெட்பம் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் தரைக்கடியில் உருவாக்கிய மண்ணறைகளில் பூஞ்சைகளை எறும்புகள் பயிரிடுகின்றன.

பயிரிடுவது மட்டுமல்லாமல் அவற்றில் களையெடுக்கின்றன; நீர் பாய்ச்சுகின்றன; சில வகை தீங்கான பாக்டீரியாவிடமிருந்து பூஞ்சைகளைக் காப்பதற்காகச் சில எறும்பினங்கள் நோயுயிர்முறிகளையோ (antibiotics) வேதிப்பொருட்களையோ பயன்படுத்துகின்றன.

பல கோடி ஆண்டுகளாக இந்த எறும்பினங்கள் எப்படி இந்த அளவுக்கு மேம்பட்ட பூஞ்சை விவசாயிகளாகப் பரிணாமமடைந்தன என்ற வரலாறு குறித்து அறிவியலாளர்கள் கண்டறிந் திருக்கின்றனர். இது குறித்த ஆய்வுக் கட்டுரை சமீபத்தில் ‘ப்ரஸீடிங்ஸ் ஆஃப் ராயல் சொஸைட்டி பி’ என்ற ஆய்விதழில் வெளியாகியிருக்கிறது.

இரண்டாகப் பிரிந்த எறும்புகள்

“உங்களுக்கு எக்ஸ்-ரே பார்வை இருந்து அமெரிக்கக் கண்டங்களின் மழைக்காடுகளில் தரைக்குக் கீழே பார்க்க முடிந்தால் ஒட்டுமொத்த நிலத்தடியும் தோட்ட அறைகளைக் கொண்டிருப்பதை நீங்கள் காணலாம்” என்கிறார் டெட் ஷுல்ட்ஸ். இந்த ஆய்வுக் கட்டுரையின் முதன்மை ஆசிரியரான இவர் அமெரிக்காவின் இயற்கை வரலாற்றுக்கான ஸ்மித்ஸோனியன் தேசிய அருங்காட்சியகத்தில் பூச்சியியலாளராக இருக்கிறார்.

இலைவெட்டி எறும்புகள் உள்ளிட்ட பூஞ்சை விவசாய எறும்புகளின் 78 சிற்றினங்களுடன் பூஞ்சை விவசாயத்தில் ஈடுபடாத 41 எறும்புகளின் சிற்றினங்களை டாக்டர் ஷூல்ட்ஸும் அவரது சகாக்களும் ஒப்பிட்டுப் பார்த்தார்கள்.

இதில் வெவ்வேறு விஷயங்களை அவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். பூஞ்சை விவசாய எறும்புகளெல்லாம் தென்னமெரிக்காவின் மழைக்காடுகளிலிருந்து சுமார் ஆறு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய மூதாதை இனத்திலிருந்து வந்திருக்கின்றன என்பதைக் கண்டறிந்தனர். மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த விவசாய எறும்புகள் இரண்டாகப் பிரிந்தன.

உகந்த தட்பவெட்பம்

ஒரு எறும்பினம் மிகவும் மேம்பட்ட, நுட்பமான விவசாய எறும்புகளை உள்ளடக்கியிருந்தது. இந்த எறும்புகள்தான் அவற்றின் பூஞ்சைகளைப் பாலைவனப் பகுதிகள், சாவன்னா புல்வெளிகள் போன்ற உலர்ந்த, அல்லது பகுதியளவு உலர்ந்த தட்பவெட்பப் பகுதிகளுக்கு எடுத்துச் சென்றிருக்கின்றன. அங்கே தரைகீழ் தோட்ட அறைகளில் அந்தப் பூஞ்சைகளை எறும்புகள் பராமரித்தன. எறும்புகளைச் சார்ந்தே வாழும்படி அந்தப் பூஞ்சைகள் பரிணாம மாற்றம் பெற்றன; அவற்றோடு சேர்ந்து எறும்புகளும் பரிணாமமடைந்தன.

இரண்டாவது பிரிவு எறும்புச் சமூகம் சற்றே மேம்படாத, சிக்கல் குறைந்த விவசாய முறைகளை மேற்கொள்ளும் எறும்புகளை உள்ளடக்கியது. மழைக்காடுகளில் வசிக்கும் எறும்புகள் அவை; அவற்றைச் சாராமலேயே வாழ்ந்துவிடும் தன்மையுடைய பூஞ்சைகளை அந்த எறும்புகள் பயிரிட்டுவந்தன.

இதைப் பற்றி டாக்டர் ஷுல்ட்ஸ் தீவிரமாக ஆராய்ந்து பார்த்தார். காலப்போக்கில், உலர்ந்த தட்பவெட்பமானது மிகவும் மேம்பட்ட விவசாய எறும்புகளுக்குப் பூஞ்சை வளர்ப்பில் உகந்த சூழல்களை ஏற்படுத்தியது.

வெப்பநிலையைக் கட்டுப்படுத்த மிகவும் ஆழமான தரைகீழ் அறைகளைத் தோண்டுதல், அல்லது பழங்கள், தாவரங்கள், காலைப் பனி போன்றவற்றிலிருந்து தண்ணீரைக் கொண்டுவருவதன் மூலம் ஈரப்பதத்தைப் பராமரித்தல் போன்ற செயல்பாடுகளை அந்த எறும்புகள் மேற்கொள்ளக் கற்றுக்கொண்டன.

“பசுங்குடில்களுக்குள் பயிர்களை வளர்ப்பதென்பது நவீன முறை. ஆனால், நமக்கும் முன்பே அந்த உத்தியைப் பூஞ்சை வளர்ப்பில் அந்த எறும்புகள் மேற்கொண்டுவிட்டன” என்கிறார் ஷுல்ட்ஸ். “உலர்ந்த பிரதேசத்தில் இருக்கும்போது அந்தப் பூஞ்சைகள் எறும்புகளின் பராமரிப்பிலிருந்து தப்பிக்கின்றன என்றே வைத்துக்கொள்வோம், பாலைவனம் போன்று இருப்பதால் அவற்றுக்குப் போக்கிடமே இல்லாமல் போய்விடும்” என்றும் சொல்கிறார் ஷுல்ட்ஸ்.

வளம் குன்றாமல் நீடிக்கும் விவசாயம்

விவசாய வழிமுறைகளில் எறும்புகளிடமிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள முடியும் என்று டாக்டர்

ஷுல்ட்ஸ் கருதுகிறார். எறும்புகளின் பூஞ்சைத் தோட்டங்கள் முதன்மையாக ஒரு பயிர்ச் சாகுபடியே. எனினும், அவற்றைக் கொண்டு 15 முதல் 20 ஆண்டுகள் வரை எறும்புகள் தாக்குப்பிடிக்கின்றன. அது மட்டுமல்லாமல் தாங்கள் வளர்த்த பூஞ்சைகளை உட்கொள்ள முயலும் மற்றப் பூஞ்சைகளை எறும்புகள் களையெடுக்கவும் செய்கின்றன.

“இந்த எறும்புகள் சுமார் 6 கோடி ஆண்டுகளாகப் பூஞ்சை விவசாயம் செய்துவருகின்றன. அந்தப் பூஞ்சைகளில் பரவும் நோயும் ஆரம்பக் காலத்திலிருந்தே இருக்கிறது, எனினும் தாக்குப்பிடித்து, வளங்குன்றாமல் பூஞ்சை விவசாயம் நீடிக்கிறது. இதே, மனிதர்கள் அந்த இடத்தில் இருந்திருந்தால் பூஞ்சைத் தோட்டங்களைச் சுற்றிலும் ஒரு மைல் சுற்றளவுக்கு மற்ற தாவரங்கள் ஏதும் இல்லாமல் நிலத்தை மொட்டையடித்திருப்பார்கள்” என்கிறார் ஷுல்ட்ஸ்.

*- நியூயார்க் டைம்ஸ், தமிழில்*
 
Top