• Please use an working Email account to verify your memebership in the forum

ஆயிரத்தில் ஒருவன் 2010

Sambaavam

Well-known member
Messages
438
Points
93

Reputation:

இன்று காலையில் பார்க்க நேர்ந்த இப்படத்தைப் பற்றி, பார்த்துக்கொண்டிருக்கும்போதே சில எண்ணங்கள் தோன்றின. படம் முடிந்ததும், அவற்றைப் பற்றி எழுதிவிடலாம் என்று முடிவு செய்தேன். இது, இப்படத்தின் விமர்சனம் அல்ல. விமர்சனமும்தான். ஆனால், இப்படத்தில் சொல்லியுள்ள வேறு பல விஷயங்களையும் பற்றி எனக்குத் தெரிந்த விஷயங்களைச் சொல்ல முயற்சி செய்கிறேன். நண்பர்களுக்குத் தெரிந்த தகவல்களைப் பற்றியும் நீங்கள் இங்கு சொல்லலாம்.

சரி. நீண்டகாலமாக செல்வராகவன் எடுத்துவந்த இந்த ஆயிரத்தில் ஒருவன் படம், எனக்குத் தெரிந்து, வெளியான தேதியில் இருந்து இன்று வரை, மக்களிடையே ஒரு எதிர்மறையான கருத்தையே பெற்றுள்ளது. அது என்ன? இப்படத்தில் செல்வராகவன் என்ன சொல்ல வருகிறார் என்பதே புரியவில்லை என்பது தான். முக்கியமாக, இரண்டாம் பகுதியில் வரும் வசனங்கள், அக்காட்சிகள் உணர்த்தும் உண்மைகள் நமது மக்கள் நிறையப் பேருக்குப் புரியவில்லை. இது, படம் பார்த்தவர்களுடன் பேசிய போதும், பார்த்துக்கொண்டிருக்கும்போதே மக்களின் கருத்துகளை அவதானித்த போதும் எனக்குத் தெரியவந்தது. குறிப்பாக, என்னுடன் படம் பார்த்த நண்பர்கள் எரிச்சலின் உச்சத்துக்கே சென்றதைக் காணமுடிந்தது.

இப்படத்தில் நாம் காண்பது என்ன? பண்டைய சோழர்களின் கடைசி இளவரசன், பாண்டியர்களுடன் ஏற்பட்ட போரில், சோழ மன்னனால் ஒரு இடத்துக்குத் தப்புவிக்கப்படுகிறான். அந்த இளவரசனுடன் பாண்டியர்களின் குலதெய்வத்தின் சிலையும் அனுப்பப்படுகிறது. அவன் சென்ற இடமும், அந்த சிலையின் இருப்பிடமும் இதுவரை யாருக்கும் தெரியவில்லை. அதனைக் கண்டுபிடிக்கச் சென்ற ஒரு ஆராய்ச்சியாளரும் (பிரதாப் போத்தன்) மாயமாக மறைந்துவிடுகிறார்.

இதனைப் பற்றி ஆராய, தொல்பொருள் துறையைச் சேர்ந்த ரீமா சென்னும், அவளுக்குப் பாதுகாப்பாக உடன் வரும் அழகம்பெருமாளும் , தொலைந்து போன ஆராய்ச்சியாளரின் புதல்வியான ஆண்ட்ரியாவை அழைத்துக்கொண்டு , தங்கள் சாமான்களைச் சுமந்துவரும் கார்த்திக்கின் ஆட்களுடன் மேற்கொள்ளும் பயணம் தான் இப்படம். முடிவில் என்ன ஆனது ? இளவரசன் சென்ற இடத்தைக் கண்டுபிடித்தார்களா? இதுதான் இப்படம்.

தமிழில் இத்தகைய முயற்சி மிகப்புதியது. ஏற்கெனவே இப்படிப்பட்ட படங்கள் எடுக்கப்பட்டிருந்தாலும் ( மிஸ்டர் கார்த்திக் – ஒரு உதாரணம்), இவ்வளவு பெரிய பொருட்செலவில், தத்ரூபமாக எடுக்கப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கும். இதைப் போன்ற பல படங்களுக்கு இது ஒரு முன்னுதாரணமாக இருக்கும். நான் அவதானித்த வரையில், இதன் கிராபிக்ஸ் காட்சிகள், எந்த ஆங்கிலப் படத்துக்கும் குறைந்தவை அல்ல. இப்படத்தின் பல இடங்களில் வரும் இந்த கிராபிக்ஸ் காட்சிகள், நல்ல முறையில் எடுக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு, நமது பாராட்டுக்கள்.

இப்படத்தின் ஒரே குறை என்று நான் கருதுவது, படத்தின் முதல் பாதியில் வரும் பாடல்கள். அவை, படத்தின் வேகத்தை முடிந்தவரை மட்டுப்படுத்துகின்றன. குறிப்பாக, காட்டில் பயணிக்கும்போது வரும் பாடலும், சிதைந்த நகரத்தைக் கண்டுபிடிக்கும்போது வரும் பாடலும்.

இன்னொரு விஷயம், இப்படத்தில் செல்வராகவனின் ட்ரேட்மார்க் காட்சிகள் எதுவும் இல்லை. இது ஒரு பாராட்டுதலுக்குரிய முயற்சி.

ஒக்கே. இப்பொழுது, இப்படத்தில் காட்டப்படும் சில விஷயங்களைப் பற்றிப் பார்க்கலாம். பண்டைய காலத்தில், சோழர்கள் தங்கள் ஆட்சியின் உச்சத்தில் இருக்கும்போது, தமிழ்நாட்டின் வெளியே இருந்த நாடுகளைக் கைப்பற்றினார்கள் என்பது நமக்குத் தெரிந்த விஷயம். குறிப்பாக, சாவகம் கொண்டான், கடாரம் கொண்டான் என்ற பட்டங்களை அவர்கள் பெற்றிருந்தது இதற்கு ஒரு நிரூபணம். அதுவும், ராஜேந்திர சோழனின் கடற்படை, அக்காலத்தின் மிகச்சிறந்த படைகளில் ஒன்று. கடல் தாண்டிப் பல நாடுகளை அது வென்றது. இந்தியாவிற்குள்ளேயே, கங்கை வரை சென்ற அவனது சைனியம், யாரையும் விட்டுவைக்கவில்லை. அந்த மன்னர்கள் அத்தனை பேரின் தலையிலும் கங்கை நிரம்பிய குடங்களை அவன் எடுத்துவந்து, கங்கை கொண்ட சோழபுரத்தைக் கட்டியது வரலாறு. இந்தச் செய்திகளின் அடிப்படையிலேயே இப்படமும் எடுக்கப்பட்டிருக்கிறது. இவ்விஷயங்களோடு சேர்த்து, சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையே நிலவிய விரோதத்தையும் இப்படம் கையாண்டிருக்கிறது.

இவற்றோடு சேர்த்து இன்னொரு விஷயத்தையும் செல்வராகவன் காட்டியிருக்கிறார். ஆனால், அதுதான் நமது மக்களின் குழப்பத்துக்கும் காரணம் என்று எனக்குப் பட்டது. இப்பொழுது நான் சொல்லவிருக்கும் விஷயங்களை நீங்கள் அவதானித்தாலே, செல்வராகவன் இப்படத்தில் சொல்ல விரும்பியுள்ளது என்ன என்று புரிந்துகொண்டு விடலாம்.

தமிழகத்தில் ஒரு காலத்தில் செல்வாக்கோடு விளங்கிய தமிழர்கள், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் புலம் பெயர்ந்து வேறு ஒரு தீவுக்குச் செல்கிறார்கள். அங்கு பல காலமாக அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். திடீரென்று, அவர்கள் மேல் கோபம் கொண்ட சில மக்கள், அவர்கள் மீது போர் தொடுக்கின்றனர். இந்தத் தமிழர்களைச் சிறைப்படுத்தி, அவர்களை சித்ரவதை செய்கின்றனர். அவர்களது பெண்களைச் சூறையாடுகின்றனர். அவர்களது தலைவனையும் பிடித்துவிடுகின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக அனைவரையும் கொன்றுவிடுகின்றனர்.

இக்கதை நமக்கு நினைவுபடுத்துவது எதை என்று சிந்தித்தாலே, இப்படத்தில் செல்வராகவன் சொல்ல வந்திருக்கும் விஷயம் என்ன என்று நமக்கு விளங்கிவிடும்.

இப்படம், இலங்கைப் பிரச்னையின் மேல் ஒரு திரைக்கலைஞனின் கோபம் என்று எனக்குத் தோன்றுகிறது. இப்படத்தில், வேறு ஒரு தீவில் வாழும் தமிழர்களின் அவல வாழ்வு நமது கண்முன்னே விரிகிறது. பல ஆண்டு காலமாக பஞ்சத்தில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தாயகம் திரும்பும் நாளை, ஆவலோடு எதிர்நோக்கி வாழ்கின்றனர். அந்த நாளும் வருகிறது. ஆனால், அப்போது, வஞ்சத்தால் அவர்கள் தாக்கப்படுகின்றனர். பதிலுக்கு அவர்கள் என்னதான் திருப்பித் தாக்கினாலும், ராணுவ உடை அணிந்த குரூரமான மனிதர்களால் வேட்டையாடப்படுகின்றனர். அழிந்தும் போகிறார்கள்.

இரண்டாம் பகுதியில் இதெல்லாம் காட்டப்படுகின்றது. ஒரு தாயின் மார்பில் , பாலுக்குப் பதில் ரத்தம் சுரக்கின்றது. அவள் வந்து தங்கள் தலைவனிடம் முறையிடுகிறாள். அதே போல், இப்படத்தில் சொல்லப்படும் இன்னொரு விஷயம், எப்போதோ நடந்த ஒரு கொடுமையினால், இன்னமும் விரோதம் பாராட்டிக்கொண்டிருக்கும் சில மனிதர்கள், தங்களது கோபத்தினால், ஒரு இனமே அழியக் காரணகர்த்தாக்கள் ஆகிவிடுகின்றனர். இந்த விஷயமும், பொட்டில் அடித்தாற்போல் இப்படத்தில்சொல்லப்படுகின்றது

இப்படம் சொல்ல விரும்பும் செய்தி இதுதான். ஒரு திரைக்கலைஞன், ஒரு சமூகப்பிரச்னையின் பேரில் தனக்கு இருக்கும் கோபத்தை, இப்படத்தின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளான் என்றே எனக்குப் படுகிறது.

இரண்டாம் பகுதியில், வசனங்களே பெரும்பாலும் இல்லை. மொத்தமாக ஒரு பக்கம் வசனங்கள் இருந்தால் அதிகம். விஷுவல்களாலேயே படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார் செல்வராகவன். அவருக்கு இது ஒரு வெற்றி. இப்படத்தின் செய்தியை வெளிப்படையாகச் சொல்வதை விட, இப்படிப் பூடகமாகச் சொல்வது தான் ஒரு திரைப்படத்துக்கு அழகு என்றே அவர் இப்படிச் சொல்லியுள்ளாரோ என்பது எனது அனுமானம்.

 
Top